ஒரு இரவும் நானும்!
- nalayiniindran
- Aug 8, 2021
- 1 min read
Updated: Sep 18, 2021
மிகவும் வெப்பமான நாளொன்றின் முடிவிலான ஒரு அமைதியான புளுக்கமான ஒரு இரவு. ஓ, ஓரு pandemic இரவு.
மனமும் உடலும் களைத்து விட்டது. நேரம் 11 மணிக்கு மேலாகிறது, இதற்கு மேலும் இருக்க முடியாது என்ற முடிவில் படுக்க போகிறேன். பல நிகழ்வுகள், நினைவுகள் உருண்டோடுகிறது. நித்திரை மட்டும் வரவில்லை.
திடீரென பெரிய ஒரு சத்தம் திறந்திருந்த யன்னல்களூடாக வெளியேயிருந்து வருகிறது. நித்திரை போய்விட்டது. ஒவ்வொரு முறையும் கார்கள் கடந்து செல்லும் போதும் தொடர்ந்தும் அதே சத்தம். மனம் பதை பதைக்கிறது. ஓஓஓ ஏதோ ஒன்று அடிபட்டுவிட்டது. பாய்ந்தடித்து யன்னலுக்கு ஓடி வெளியே பார்க்கிறேன். அமைதியான அழகான இரவு, எல்லாமே அமைதி- ஓரே ஒரு கண ஒட்டம். அந்த அமைதியான வெளிச்சத்தில்
கறுப்பாக ஏதோ ஒன்று சின்னதாக சுருண்டு கிடக்கிறது. ஐயய்யோ, மனம் பதறுகிறது. எதுவாக இருக்கும். Hedgehog or fox ஏதோ ஒரு உயிரினம் என்ற வகையில் மனம் ஒடுங்கி போய் நிற்கிறது. வெளியே கதவுவரை ஓடுகிறேன். நேரமோ 12.30 மணியாகிறது. எல்லோரையும் எழுப்பி பார்க்கிறேன். பயனில்லை.
இந்த இரவில் வெளியே போகவும் பயமாகத்தான் இருக்கிறது.
திடீரென்று யாரோ கதைப்பது கேட்கிறது. வெளியே பார்க்கிறேன். மூன்று இளவயது ஆண்கள் தூரத்தே தெருவில் கிடந்த ஒன்றை சுற்றவர நின்று பார்க்கிறார்கள். மனதில் ஒருவகை நிம்மதி. பார்த்துக்கொள்வார்கள் மீண்டும் படுக்கப் போய் தலை சாய்க்கிறேன்.
மீண்டும் அதே சத்தம், ஒவ்வொரு காரும் போகும்போதும் அதே தடதடப்பு. இப்போது நடுத்தெருவில் கிடக்கிறது. பலகண நேரப்போராட்டம். இப்படி பலதடவைகள் காப்பாற்றி இருக்கின்றேனே. ஆனால் பகல் நேரம். சுறுசுறுப்பான தெருக்களில் கூட வாகனங்களை நிறுத்தி காப்பாற்றி இருக்கின்றோமே. பயம், பதட்டம், களைப்பு, குற்ற உணர்வு ஒன்றை ஒன்று மாறி மாறி துரத்துகிறது. அப்படியே நித்திரையும் ஆகிவிட்டேன்.
அமைதியான அழகான காலைப்பொழுது சிறு மழைத்துளிகளுடன். காலை மரதன் தொடங்கி விட்டது. எல்லா வேலைகளும் ஒரு வேகத்தில் முடிவடைய trainயை பிடிப்பதற்கான அடுத்த ஓட்டம் தொடங்குகிறது
தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, கதவை சாத்தி மழைத்தூறலுக்குள் இறங்கி நடக்கத் தொடங்குகிறேன். பாதி தூரம் நடந்த பின்பே ஞாபகத்திற்கு வருகிறது.ஓஓஓஓஓ, இரவு அடிபட்ட அந்த உயிரினம். திரும்பி ஓடுகிறேன். வேலைக்கு நேரம் போனாலும், பார்த்துவிட வேண்டும் என்பதில் மனம் படபடக்கிறது. கிட்ட நெருங்குகிறேன். கறுப்பாக ஏதோ ஒதுங்கிக்கிடக்கிறது. நம்பவே முடியாமல் பார்க்கிறேன். ........ஒரு சோடி குதி உயர்ந்த செருப்புகள் சிதறி போய் கிடக்கிறது. மனதில் இருந்து மிகப்பெரிய பாரம் இறங்கியது போல ஒரு உணர்வு.!!
திரும்பவும் இன்னுமொரு ஓட்டத்தில் இணைந்து கொள்கின்றேன்.
சுவாரஸ்யமான கதை. அந்த குதிச்சப்பாத்துக்குரியவள் யாராக இருக்கும்?