மனதில்........
- nalayiniindran
- Aug 4, 2024
- 2 min read
Updated: Feb 15
வேகமாக ஓடிக்கொண்டிருந்தது புகையிரதம், யாழ்ப்பாணத்தை
நோக்கி.
ஏறக்குறைய 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த மண்ணினை நோக்கிய பயணம். கனதியான நினைவுகள், வாழ்க்கையின் மிக நீண்ட பல பரிமாணங்கள் கொண்ட பயணங்கள், தெளிவான நினைவுகளும் தெளிவில்லாத கேள்விகளும் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கின்ற வாழ்க்கை--- தலை நிறைய கனத்துப்போய் கிடந்தது. இந்த கனதிக்கும் அடியில் உறங்கிக் கிடக்கின்ற பழைய நினைவுகளுக்கும் இடையில் மனம் முன்னுக்கும் பின்னுக்குமாக காலங்களையும் காட்சிகளையும் ஓடவிட்டுக்கொண்டிருந்தது.
சில்லென்ற காற்றுடன் இளம் காலைப்பொழுது பொல பொல என விடிந்து கொண்டிருந்தது. அது ஒரு அழகான காலைப்பொழுது. பல வருடங்களுக்கு பிறகு அமைதியாக விடிந்துகொண்டிருந்த காலை எனக்கு இந்த மண்ணில். முடிந்தும் முடியாமலும் வெளியே இள வெளிச்சத்தில் மரங்களும் பற்றைகளும் மண்ணும் காட்சிகளும் வேகத்தின் பின்னே மறைந்து கொண்டிருந்தது.
இந்த மண்ணினை ஏறக்குறைய 25 வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன். மனதினுள் ஒரு பதட்டம், உள்ளுக்குள் ஒரு பதைபதைப்பு, ஏன் என்று தெரியாமல் கண்களிலிருந்தும் கண்ணீர் கசியத் தொடங்கியது. அவசர அவசரமாக துடைத்துக் கொண்டு யன்னலுக்கூடாக ஓட்டிக்கொண்டிருந்தாகத்தான் பட்டது. நான் மட்டுமல்ல இந்த அனுபவத்தினை பலரும் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்தது.
பொழுதுகள், நாட்கள் எந்த வித மாற்றங்களும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனாலும் சுற்றிவர எதிலும் மாற்றங்கள். காலத்தோடு மாறவேண்டிய மாற்றங்கள்தான். கட்டிடங்கள், நிலப்பரப்புகள், தெருக்கள், கோயில்கள், மக்களது புலம்பெயர்வுகள் என எல்லாவற்றிலும் மாற்றம். என்றாலும், இன்னமும் பல தெருக்களும், கட்டிடங்களும் மாறாமலே பொலிவிழந்து போரில் உடைந்து ஓளிந்துகொண்டிருப்பதாகப் பட்டது,.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு அசைவிலும் ஓடிக்கொண்டிருந்தது என்னவோ, 25 வருடங்களுக்கு பிற்பட்ட போர்ப்பயங்கரங்களும், சஞ்சலங்களும், குண்டுவெடிப்புகளும், ஷெல்சத்தங்களும், இழப்புகளும் அவலங்களும்,.........
அடிக்கடி மனதை துரத்திப்பிடித்து இத்தருணத்திற்கு கொண்டுவரவேண்டியிருந்தது என்னமோ உண்மைதான்.
சிப்பி செதுக்கி அழகாக கட்டி விளையாடிய முற்றங்கள் காய்ந்துபோய் சருகுகளுடன் தரைதட்டி போய் கிடந்தது. சீற்றம் கொண்டு ஆர்ப்பரித்து பல கதைகள் சொன்ன கடல், ஆடிக்களைத்து ஓய்ந்து போய், சிறு அலைகளை மட்டும் கரைக்கு தட்டிக்கொண்டு இருந்தது.
உயிரைப்பிடித்து ஓடி ஓளித்து அல்லாடிய நிலங்கள் முழுவதுமாய் மாறிவிட்டது. ஓயாத ஷெல் சத்தங்களும், தொடர்ந்து கொண்டிருந்த துப்பாக்கி சத்தமும் குண்டுகளாய் பொழிந்து தள்ளிய பொம்மர்களின் ஓட்டங்களும் இல்லாமல் நிதானமாய் நீலமாய் வானம் பரவிப்போய் கிடந்தது. ஆசையாய் நடந்து விளையாடிய இடங்கள், நிலங்கள், சந்தோஷமாய் அரவணைத்த மரங்கள், பூக்கள், இப்படி எத்தனையோ வந்து கிசுகிசுத்து போயின.
கோயில்களும் கடவுள்களும் இருந்தார்கள்- நிறையவே. அவற்றை சுற்றி சுற்றி வந்து அலை மோதிய கூட்டங்கள். கடவுள்களின் காதுகளில் ஆராக்கதைகள்/வேண்டுதல்கள் சொல்லிக் போனார்கள்- நம்பிக்கைகளுடன்.
ஆறுதலாக (அப்படித்தான் அப்போது நினைத்தே ன்) அமர்ந்திருந்து அசைமீட்ட பின்பு கடற்கரை மண்ணை தட்டியபடி எழுந்தபோதுதான் கவனித்தேன்- கடற்கரை மண்ணில் தனியாய் நின்றுகொண்டிருந்த யேசுவின் முன்னால் இருந்து ஒரு இளவயதுப் பெண்ணொருத்தி பிரார்த்தித்துக் கொண் டிருந்தாள். கண்களில் கண்ணீர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. கனத்த மனதுடன் நடக்கத்தொடங்கினேன்.
ம்....... இன்னமும் எதனையுமே வெளிக்காட்டிக் கொள்ளும் இருந்த மனித முகங்களுக்குள் மட்டும் எதனையுமே புரிந்து கொள்ளமுடியாமல் தேடிக்கொண்டிருந்தேன்.
துருப்பிடித்துப்போன துவிச்சக்கரவண்டியைதட்டித்தட்டி ஓடிக்கொண்டிருந்த சிறுவனை கண்களால் தொடர்ந்து கொண்டிருந்த பொழுதுதான் தொலைவில் தெரிந்த வாசகங்கள் கண்ணில் பட்டது.
' ஆண்டவரே இனியும் எங்களை சோதிக்காமல், எங்கள் வாழ்வினை மீண்டும் கட்டியெழுப்ப உதவுங்கள்' அர்த்தமுள்ள வாழ்த்தைகள்தான்.
நாள்கள், கிழமைகள் ஓடி திரும்ப வேண்டிய நாளாகிவிட்டிருந்தது. மனதினுள் ஒரு ஏக்கம். எதனையோ விட்டுச்செல்கின்ற உணர்வு. மனம் அல்லாடிக் கொண்டிருந்த பொழுது, தடாலென கால் தடுக்கி பலத்த அடியுடன் விழுகிறேன். நல்ல அடி போலத்தான் பட்டது. தாங்கமுடியாத வேதனையாக இருந்தது.
சுதாகரித்துக்கொண்டு எழ முயற்சிக்கிறேன், முடியவில்லை.
ஆனால், இரண்டு சிறிய கால்கள் என்னை நோக்கி ஓடிவருவது தெரிந்தது. '
ஆ!!!! விழுந்து விட்டீர்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே' என தன்னுடைய சின்னஞ்சிறிய கைகளில் எனது முகத்தினை தாங்கி சிங்கள மொழியில் கேட்டபடி நின்று கொண்டிருந்தது கிட்டத்தட்ட 5 வயதுடைய குழந்தை.
மனம் திகைத்துப் போய் நின்றது. எழுப்பியபடி, ஒன்றுமில்லை என சொல்லுகிறேன். என் கைகளை இறுக்கமாக பிடித்தபடி நிற்கிறது, அந்தக்குழந்தையின் கைகள்.
Comments