மீண்டும் ஒரு காலம் March 2021/ பகுதி 2
- nalayiniindran
- Aug 8, 2021
- 1 min read
Updated: Aug 25, 2021
மூன்று தடவைகள் இப்படியான பெரும் பிரச்சனைகளுக்குள் வாழ்க்கையில் அகப்பட்டுவிட்டோம். முதல்முறை 2 வது உலக மகாயுத்தம், இரண்டாவது எங்கள் தாயக விடுதலைப் போராட்ட காலம், இப்போது இந்த கொடுந்தொற்று நோய்........ம்ம்ம்ம்ம், நாங்கள் அந்த காலத்தில்............ அப்பா சொல்லிக்கொண்டு போகிறார். வாழ்க்கையின் பீதி பிடித்த காலங்களில் ஒன்று. மனப்போராட்டங்களுடன் கூடிய காலங்களும் கூட. வாழ்விற்கும் இருப்பிற்குமான காலங்களில் ஒன்று.
மெதுவாக தலையை திரூப்பி யன்னலுக்கு வெளியே பார்க்கிறேன். எல்லாமே புகைமூட்டம் கவிழ்ந்து போயிருக்கிறது. பக்கத்து வீடுகளும் காய்ந்துபோயிருந்த மரங்களும் கூட புகாருக்குள் மெதுவாகத்தான் தெரிகிறது. ம்ம்..... அதுவும் அழகாகத்தானிருக்கிறது. அதிசயமாக அணில்கள் தோட்டத்து முற்றத்தில் அதுவும் அந்த விறைத்த குளிருக்குள்ளும் ஓடித்திரிகின்றன. விளையாடுகின்றனவா அல்லது எதையாவது தேடுகின்றனவா?
திறந்தபடியே கிடக்கன்ற புத்தகங்களையும் அடுக்கிக்கிடக்கின்ற புத்தகங்களையும் தாண்டி எதையோ எதற்குள்ளோ தேடுகின்றேன். இப்படித்தான் இப்போது பலநேரங்களில், ஒன்றிலும் மனம் செல்லாமல் பயந்துகொண்டிருக்கின்றது.
ஆனாலும் பிரச்சனைகள், மனித அவலங்கள், அர்த்தங்கள் என பல விடயங்கள் விளங்கியும் விளங்காமலும், புரிந்தும் புரியாமலும், புதுப்புது பரிமாணங்களில் அறிந்து கொண்டே கடந்து கொண்டேயிருக்கிறோம். காட்சிகளும் காரணங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறது. மனமும் கண்களும் கரைந்துகொண்டேயிருக்கிறது காரணங்கள் எதுவுமில்லாமல். எப்போதும் போல மனம் மட்டும் பழையபடி ஊர்முற்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
பின்முற்றம், அதற்குமப்பால் மரங்கள், தூரத்து பச்சைகள் என எல்லாமே மெதுவாக அரும்பு கட்ட தொடங்குகின்றன, மொட்டுகள் மெதுவாக முகிழ்க்கின்றன புது நம்பிக்கைகளைப்போல.
Comments